உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நவீன அறிவியல் நமக்களித்த ஒரு தொழில்நுட்பத் தீர்வுதான் (technological solution) பசுமைப் புரட்சி. அப்படியென்றால், உணவுப் பிரச்சினை பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை என்ற முடிவில்தான் இப்படி ஒரு தீர்வை முன்வைத்திருக்க வேண்டும். அந்தத் "தீர்வின்" பலன்களை அலசி ஆராய்ந்து பார்ப்பது அடுத்த கட்டம். முதலில், இந்த முடிவின் அடிப்படை அனுமானங்களைக் கேள்விக்குட்படுத்தப்போகிறோம்.
இதுவரையில் நாம் ஆழமாகப் பார்த்ததுபோல, இந்திய மண் வளமிழந்தது உண்மைதான். போதிய (எருவாகிய) சாணம் கிடைக்காமல், மண்ணுக்குச் சேர வேண்டிய பிண்ணாக்குகள் ஏற்றுமதியாகி, கால்நடைகளுக்குப் போதிய உணவில்லாமல், பயிர் சுழற்சி கைவிடப்பட்டு, கால்நடைகள் லட்சலட்சமாய் மாண்டுபோய், மேல்மண் அரித்துக்கொண்டு, கரைச்சுவர்களினால் நிலங்கள் உப்பாகி, கால்வாய்களும் கிணறுகளும் பழுதடைந்து... இப்படி நாம் பார்த்த பல காரணங்களினால் நம் நிலங்கள் வளமிழந்து நின்றன. இதனால் உணவு உற்பத்தியும் சரிந்தது. நாம் பார்த்ததுபோல, இந்தக் காரணங்களின் பின்னணியில் பல அரசியல் - பொருளாதாரக் காரணிகள் இருந்தாலும், இவை பெருமளவில் உற்பத்திக் குறைவு என்கிற தொழில்நுட்ப ரீதியான பிரச்சினையில் அடங்கும் என்று வாதத்திற்காகச் சொல்லிக்கொள்ளலாம். இந்தக் கட்டுரையில், சுதந்திரத்திற்கு முன்பாக நம் நாட்டில் பரவலாக இருந்த உணவுப் பற்றாக்குறையைச் சற்றே ஆராயப்போகிறோம்.
இக்கட்டுரைக்கான தகவல்கள் அனைத்தும், காந்தியடிகள் நடத்திய "ஹரிஜன்" பத்திரிகையில் 1935-யிலிருந்து 1947 வரையில் (இடையில் பத்திரிகை தடைசெய்யப்பட்ட 1942-45யை விட்டுவிட்டு) வெளியாகிய பல கட்டுரைகளிலிருந்து சேகரிக்கப்பட்டவை. உணவுப் பற்றாக்குறைப் பிரச்சினை நாடெங்கும் பரவிய காரணத்தால், அந்த நாட்களில் இது ஒரு முக்கியமான தேசியப் பிரச்சினையாகக் கருதப்பட்டது. இதை ஆராய்ந்து, இதற்கான பல தீர்வுகளை முன்வைத்து மருத்துவர்கள், விஞ்ஞானிகள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான கடிதங்களை காந்திக்கு அனுப்பினர். இவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்து, கவனமாகத் தேர்ந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்துவந்தார் காந்தி. பிரசுரமான கட்டுரைகள் "Food Shortage and Agriculture" என்ற புத்தகமாக 1949-இல் வெளியானது. இப்புத்தகத்தை http://www.new.dli.ernet.in என்கிற வலைதளத்தில் காணலாம். இந்தப் புத்தகத்தில், அரசாங்கம், நுகர்வோர், விவசாயிகள், வியாபாரிகள் ஆகிய அனைத்துத் தரப்பினர்களுக்குமான உணவு இருப்பை அதிகரிப்பதற்கான யோசனைகளைப் பற்றி காந்தியடிகள் பல பக்கங்களுக்கு எழுதியுள்ளார்.
வங்காளப் பெரும்பஞ்சம்
இப்போதைய நம் கதை, கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போரின் சமயத்திலிருந்து தொடங்குகிறது. போர்க்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அதிக உணவை உற்பத்திசெய்வோம் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவில் உற்பத்தி பெருகவில்லை.
உலகப் போரில் மத்திய கிழக்கில் இருந்த இந்திய - ஆங்கிலேய இராணுவத்திற்காக உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1942-இல் ஜப்பானியர்கள் ஆங்கிலேயரை வென்று, சிங்கப்பூரையும் பர்மாவையும் கைப்பற்றினர். இதனால் பர்மாவிலிருந்து இந்தியாவுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த அரிசி நின்றுபோனது. இது நம் நாட்டுத் தேவையில் 5%. பின்னர், ஜப்பானியர்கள் பர்மாவிலிருந்து வங்காளத்துக்குள் நுழைந்து இந்தியாவையும் கைப்பற்றிவிடுவார்களோ என்ற பயத்தில், வங்காளத்தில் இருந்த ஆங்கிலேய இராணுவத்தினருக்கான உணவு அவசர அவசரமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. இதெல்லாம் போதாதென்று, அக்டோபர் மாதம் 1942-இல் ஒரு மாபெரும் புயல் வங்காளத்தைத் தாக்கி இளம் பயிர்களை அழித்தது. இவை தவிர, எப்போதும்போல இந்திய தானியங்களை ஆங்கிலேயர் ஏற்றுமதி செய்வதும் தொடர்ந்தது.
பல காரணங்களினால், வங்காளத்தில் கிடைத்துக் கொண்டிருந்த உணவு இருப்பு குறையத்தொடங்கிய சமயத்தில் அரசு ஒரு காரியத்தைச் செய்தது. உண்பதற்குத் தேவையான உணவுக் கிடங்குகளில் போதிய அளவு இருந்தும், அரசாங்கம் "உணவுப் பஞ்சம்" பற்றிய ஒருவித பயத்தைப் பரப்பியது. விலைக் கட்டுபாட்டுக் கொள்கையைப் பின்பற்றி, உணவுப் பொருட்களுக்கு அரசாங்கமே ஒரு குறைந்த விலையை நிர்ணயம் செய்து உணவு விநியோகத்தையும் கட்டுப்படுத்தியது. இதனால், வியாபாரிகள் தங்கள் கையிருப்பைப் பதுக்கிவைத்துக்கொள்ளத் தொடங்கினர். இதனால், உணவு போதிய அளவில் சந்தைக்கு வராமல் செயற்கையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. பதுக்கிவைக்கப்பட்ட உணவுகளின் அளவுகள் எவ்வளவு என்று வெளிப்படையாகத் தெரியாததால், ஏற்கனவே ஏற்பட்ட செயற்கைப் பற்றாக்குறை தீவிரமடைந்து, அதனால் பயம் அதிகரித்து, விவசாயிகளும் வியாபாரிகளும் மேலும் பதுக்கினார்கள். அதே சமயம், ஒரு மாபெரும் கருப்புச் சந்தை உருவாகியது. பணக்காரர்கள் அதிக விலை கொடுத்து உணவை வாங்கினார்கள். இது முடிவற்ற ஒரு சுழற்சியாக மாறி, கட்டுப்பாடும் பற்றாக்குறையும் பயமும் கள்ளச் சந்தையும் ஒன்றையொன்று வளர்த்தன. இதையடுத்து, அரசாங்கத்தில் ஊழல் அதிகரித்து, அரசாங்க அதிகாரிகள் பணம் பண்ணத் தொடங்கினார்கள். இப்படிப்பட்ட இலாபகரமான ஏற்பாட்டை மாற்றியமைக்க, அதிகாரமுள்ளவர்களுக்கு எந்த ஆர்வமோ நிர்ப்பந்தமோ ஏற்படவில்லை. இப்படியாக, புழக்கத்தில் இருந்த உணவு, கையிருப்பில் இருந்த உணவு, ஏழை மக்களுக்குக் கிடைக்காமல் போயிற்று.
ஆகஸ்டு 1943-இல் இந்திய அரசாங்க உணவுத் துறை, "வங்காளத்திலிருந்து உணவு ஏற்றுமதி அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது" என்று அறிவித்தது. ஆனால், கல்கத்தா சுங்கத் துறை (Calcutta Customs House) வெளியிட்ட ஏற்றுமதிப் பட்டியலின்படி, ஆகஸ்டு-செப்டம்பர் ஆகிய மாதங்களில் மட்டும், ஒரே ஒரு அந்நிய நிறுவனம் மட்டுமே, 22,504 டன் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாகப் பின்னர் தெரியவந்தது!
இப்படி வங்காள மக்கள் அனைவருக்கும் ஓராண்டிற்குப் போதுமான உணவு இருந்தும், ஏழை மக்களுக்கு மட்டும் அது போய்ச் சேரவில்லை. நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், வங்காளப் பெரும்பஞ்சத்தைப் பற்றி அவருடைய "Poverty and Famines" (பஞ்சங்களும் வறுமையும்) என்னும் புத்தகத்தில் எழுதுகையில், பஞ்சத்தில் மாண்ட 30 லட்சம் மக்களில் அனைவருமே கூலியாட்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், பஞ்சம் ஏற்படாத, போர் நிகழ்ந்துகொண்டிருந்த ஆண்டான 1941-ஐவிட 1943-இல் உணவு உற்பத்தி அதிகமாகவே இருந்தது என்றும், அதனால் உணவுப் பற்றாக் குறை என்பது உற்பத்தி பற்றிய பிரச்சினை இல்லை என்றும், அது முக்கியமாக அரசியல் பொருளாதாரப் பிரச்சினை என்றும் நிரூபித்தார்.
1946-இல்கூட, டாக்காவில் ஒரு மாண்டு (37.32 கிலோ) அரிசியின் விலை ரூ. 50ஆக அதிகரித்ததாம். ஆனால், மற்ற மாகாணங்களில் ரூ.20க்கு விற்பனையாகியதாம். சாதாரணமாக, அதற்கு முன்னதாக இருந்த அரிசியின் விலை ரூ. 4!
நாடு முழுவதும் உணவுப் பற்றாக்குறை
இவற்றையெல்லாம் தொடர்ந்து வங்காளத்தில் மட்டுமல்லாமல், நாடெங்கிலும் உணவுப் பற்றாக்குறை பரவத்தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணமாக அரசாங்கத்தின் விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையைத் தான் சுட்டிக்காட்டுகிறார் காந்தி. இது, இருக்கும் உணவைப் பெரும்பான்மையான ஏழை மக்களுக்குப் போய்ச்சேராமல் செய்து, கிடங்குகளில் தங்கிச் சீரழியக் காரணமானது. இந்தக் கொள்கையை நிறுத்துமாறு காந்தி அடிக்கடி "ஹரிஜன்" பத்திரிகையின் மூலம் அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார்.
1946-இல், மும்பையில் இருந்த ஒரு இந்தியக் கப்பல் கம்பெனியின் நிர்வாகி மூலம் கீழ்க்கண்ட தகவல் தெரியவந்தது. "ஜப்பானுக்குத் தொலைத்த இரண்டு கப்பல்களுக்குப் பிறகு, போன மாதம்தான் ஒரு புதிய கப்பல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. சென்ற வாரம்தான் (14.2.1946) ஒரு அந்நிய நாட்டுக்கு அவளது (கப்பலின்) முதல் பிரயாணம் நடைபெற்றது. அதில் 2,951 மூட்டை பாசிப் பருப்பைக் கொண்டுசென்றாள். சென்ற மாதம், "பேகம்" மற்றும் "ஜலஜ்யோதி" ஆகிய நீராவிக் கப்பல்கள் (Steamers) 35,000 மூட்டை பருப்பு வகைகளைக் கொழும்புக்குக் கொண்டுசென்றன் 3,011 மூட்டை துவரம் பருப்பு, 1,612 மூட்டை பாசிப் பருப்பு, 26,053 மூட்டை ஏனைய உணவுப் பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. அதிகாரிகளுக்குத் தெரிந்தவரையில், இதே அளவுகளில் ஒவ்வொரு மாதமும் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன. உணவுப் பற்றாக்குறை தலை விரித்து ஆடும் சமயத்தில்கூட, உணவு ஏற்றுமதி என்னவோ நாட்டின் பல துறைமுகங்களிலிருந்து நடந்து கொண்டுதான் இருந்தது என்பதை இது போன்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அரிசித் தொழிற்சாலைகளில் நேர்ந்த இழப்புகள்
தினஜ்பூரிலிருந்து, வடக்கு வங்காள அரிசித் தொழிற்சாலை சங்கத் தலைவரின் அறிக்கை கீழ்க்கண்ட பல முக்கியமான தகவல்களை அளிக்கிறது.
"1944 வரை உடைந்த அரிசிகளை (குறுணைகளை) எல்லாம் சேர்த்துத்தான் மக்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். 1945-இல், அரிசித் தொழிற்சாலைகள் இந்தக் குறுணைகளை நீக்கி முழு அரிசியை மட்டுமே விநியோகம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டன... இந்தக் குறுணை மூட்டைகள் ஏராளமாகத் தேங்கத்தொடங்கிவிட்டன. எத்தனையோ முறை முறையிட்டும், நினைவுபடுத்தியும், இவற்றை உபயோகப்படுத்த எந்த ஏற்பாடும் மேற்கொள்ளாமல் உள்ளது."
"பல சமயங்களில், "தரம் குறைவு" என்ற காரணம் காட்டி, அரசாங்கம் தொழிற்சாலைகளிலிருந்து அரிசியை வாங்கவும் வாங்காது, எங்களை ஏற்றுமதி செய்யவும் விடாது. இதனால், உணவு வீணாகிப்போகும் அல்லது, மாட்டுத் தீவனத்துக்குச் செல்லும். அரசாங்கம் விற்கும் மிக மோசமான அரிசியைவிட எங்கள் அரிசி எவ்வளவோ தரமானது. உள்நாட்டிலேயே விற்க அனுமதியளித்தால்கூட, இத்தகைய உணவுப் பற்றாக்குறைக் காலங்களில் மக்களுக்காவது போய்ச்சேரும்!"
"100% மெருகேற்றிய அரிசியை மட்டுமே விநியோகம் செய்யுமாறு அரசாங்கம் எங்களைக் கட்டாயப்படுத்துகின்றது. சிறிது பழுப்பாகவோ இளஞ் சிவப்பாகவோ இருந்துவிட்டால்கூடக் கடுமையாக வரி விதிக்கப்படுகின்றது. மெருகேற்றும்போது, அரிசி நிறைய உடைந்தும் வீணாகிறது! இத்தகைய இழப்பு ஒரு பெரும் குற்றமாகும்."
"அதனால், உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைத்து இந்தப் பிரச்சினைகளைக் கவனிக்கவில்லையென்றால், 1943-இல் வங்காளத்தில் ஏற்பட்ட சோகம் நாடு முழுவதற்கும் பரவிவிடும்."
ஆங்கிலேயரின் நவீன அரிசி ஆலைகள் (rice mills) வந்த காலத்திற்கு முன்புவரையில், நாம் உண்ட அரிசி நெல்லை உரலில் குத்தி நமக்குக் கிடைத்த, முக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கிய தவிட்டுடன் கூடிய ஒருவித பழுப்பு நிற அரிசியே. அதற்குப் பிறகுதான், அரிசியிலிருந்து தவிட்டை நீக்கி, மெருகேற்றி, வெள்ளை வெளேரென்று கிடைக்கத் தொடங்கியது. வெகு விரைவிலேயே இதை மக்கள் நன்றாக ருசியும் பார்த்துவிட்டனர். காந்தியடிகள் இதைப் பற்றி எழுதுகையில், "பர்மாவிலிருந்து இறக்குமதியாகிக் கொண்டிருந்த (இப்போது நிறுத்தப்பட்டுள்ள) அரிசி இறக்குமதி என்னவோ நமது தேவையில் 5%தான் (1938-39ல் இந்தியாவின் அரிசி உற்பத்தி 240 லட்சம் டன் பர்மாவிலிருந்து இறக்குமதியானது 14 லட்சம் டன்). ஆனால், இப்படி அரிசியை மெருகேற்றும்போது ஏற்படும் இழப்பு 10% ஆகும். அதாவது 28 லட்சம் டன்" என்று எழுதினார். அரசாங்கம் சமீபத்தில் விநியோகிக்கத் தொடங்கிய பழுப்பு அரிசியை வாங்கி உண்ணுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், விரைவில் மும்பையில் ஒருவித இரும்பு உரல்-உலக்கை வேகமாக விற்பனையாகத் தொடங்கியது. வாங்கிய அரிசியை வீடுகளிலேயே அரைத்து மெருகேற்றுவதற்காக உபயோகப்பட்ட இந்த உரல்-உலக்கை, 30% வரை இழப்பை ஏற்படுத்தியது என்று காந்தியடிகள் வருத்தத்துடன் எழுதினார். இது அரசாங்கத்திடம் கிடைக்கும் மெருகேற்றிய அரிசியைவிட மோசமானதாகும் என்றார்.
போக்குவரத்து மற்றும் கிடங்குகளில் ஏற்பட்ட இழப்புகள்
நிலங்களில் அறுவடைசெய்யப்பட்ட உணவு தானியங்கள், தொழிற்சாலைகளுக்கும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்களில் இருந்த விநியோக மையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இப்படி எடுத்துச் செல்லும்போது கிழிந்த கோணிகளினால் ஏற்பட்ட இழப்புகள், மழை, மற்றும் எலிகள், பறவைகளால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளமாக இருந்தன.
"சென்ற 12 மாதங்களில் மட்டுமே, 30 லட்சம் மாண்டு கோதுமை, அரசாங்கக் கிடங்குகளில் சேதமாகியுள்ளது." என்று வங்காள உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது.
காந்திக்குக் கடிதம் எழுதிய ஒருவர், தான் நேரில் கண்ட ஒரு சம்பவத்தை எழுதிருந்தார். ஒரு முறை லஹோருக்கும் லயல்பூருக்கும் இடையே உள்ள இரயில் தண்டவாளங்களுக்கு இடையே மற்றும் சில திறந்த லாரிகளில் இருந்து மழையில் நனைந்த கோதுமை மூட்டைகள் மட்டும் 1,500 டன் ஆகும். "பெரிய அளவுகளில் பாழாகிப்போன கோதுமை மாவைக் கடந்த சில நாட்களாக நாராயன்கஞ்சில் உள்ள "தலாக்" நதியில் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்." என்றது ஒரு வங்காள செய்தித்தாள். " "மனிதர்களுக்கு ஏற்றதல்லாத உணவு" என்று அறிவிக்கப்பட்ட, கிடங்குகளில் தேங்கிக்கொண்டிருக்கும் உணவுப் பொருட்கள் ஏராளமாக வெளியே கொண்டு கொட்டுகிறார்களாம். இதைப் பற்றிய கடிதங்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன." என்றார் காந்தி.
ஒரு மருத்துவர் எழுதிய கடிதத்தில், கிடங்குகளில் தேங்கிக்கிடக்கும் உணவு பாழாகிப்போய், அதை உண்ணும் மக்களுக்கு வியாதிகள் அதிமாகியுள்ளன என்று கூறியுள்ளார்.
பணப் பயிர்களுக்காக விட்டுக்கொடுக்கப்பட்ட நிலங்கள்
உணவுப் பற்றாக்குறை மோசமாக இருந்த நிலையில்கூட, ஆங்கிலேயருக்கு இலாபம் ஈட்டித்தந்த பணப்பயிர் வளர்ப்பு சற்றும் தடைபடாமல் வளர்ந்துகொண்டு வந்தது. "லட்சக்கணக்கான ஏக்கர் வளமான மண் - குண்டூரில் 4 லட்சம், கிருஷ்ணா கோதாவரி மாகாணங்களில் 6 லட்சம், சர்கார்களில் 10 லட்சம், மற்றும் இதர பகுதிகளில் 20 லட்சம்-வர்ஜினியா புகையிலை வளர்க்கப் பயன்பட்டுவருகிறது." என்று காந்தி கணக்கிட்டுக் காட்டினார். புகையிலைக்கு வரி விதிக்காத சில மாநிலங்களில் மட்டும் இலவசமாக நிலங்கள் வழங்கி, விதைகளை விநியோகம் செய்து, வேறு மாநிலங்களிலிருந்து புகையிலை விவசாயிகளை வரவழைத்து சம்பளம் கொடுத்தது அரசாங்கம். இப்படிக் கிட்டத்தட்ட 3,000 குடும்பங்கள் குஜராத்திலிருந்து பக்கத்து மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன.
இது தவிர, அரிசி, சோளம், கோதுமை, உருளைக் கிழங்கு, ஜவ்வரிசி, பார்லி ஆகியவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு, குறைந்தது 13 தொழிற்சாலைகள் starch, dextrine ஆகியவற்றைத் தயாரித்ததாகவும், அது தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.
தீர்வுகள்
அந்தச் சமயத்தில், பிற நாடுகளிலிருந்து உணவு இறக்குமதி செய்யும் சாத்தியக்கூறைப் பற்றி அரசாங்கம் பேசத் தொடங்கியது. இதை முற்றிலும் நிராகரித்தார் காந்தி. "இந்திய மண்ணில் நம் நாட்டுக்குத் தேவையான உணவு தானியங்களை விளைவிக்க முடியாது என்ற வாதத்தை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். நமக்கு இப்போது தேவையானது எல்லாம் தன்னம்பிக்கை, நல்ல யோசனைகள் மற்றும் கடும் உழைப்பு."
இதுவரை நாம் பார்த்த இத்தனை பலவிதமான இழப்புகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைச் சரிப்படுத்தத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும் என்பது தவிர, உணவைப் பெருக்குவதற்கான பல வழிகளைப் பற்றி காந்தி எழுதியுள்ளார். எளிதாக மற்றும் விரைவில் விளையக்கூடிய கிழங்கு வகைகளை அதிகம் பயிரிடலாம். தவிட்டுடன் சேர்ந்த அரிசி மற்றும் கோதுமையால் செய்த உணவுகளை உட்கொள்ளலாம். ஆல்பர்ட் ஹோவார்டின் "இந்தோர் முறை"யில் எரு தயாரித்து நிலங்களுக்கு இடலாம். எல்லா இடங்களிலும் விளைந்திருக்கும் காட்டுக் கீரைகளை அடையாளம் கண்டு, அவற்றை உபயோகப்படுத்தும் முறைகளைத் தெரிந்துகொண்டு எளிதில் ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். எல்லா வீடுகளில் கிடைக்கும் தொட்டிகளில் எல்லாம் சிறிது மண்ணை நிரப்பிக் காய்கறி பயிரிடலாம். இப்படிப் பல யோசனைகளைப் பற்றி விரிவாக எழுதிய வண்ணம் இருந்தார். இது தவிர, நிலச் சொந்தக்காரர்கள் எல்லாம் தங்கள் நிலங்களை தரிசாகப் போட்டிருக்காமல், ஏதாவது உணவுப் பொருட்களை விளைவிக்குமாறு கேட்டுக்கொண்டார். 1946-இல், 22% (471.5 லட்சம் ஏக்கர்) விவசாய நிலம் ஒன்றும் விளையாமல் தரிசாகக் கிடந்ததாம்.
"நாட்டில் ஏற்படும் பஞ்சங்களுக்கு மக்கள்தொகை வளர்ச்சியைக் காரணம் காட்டுவது சமீபத்தில் ஒரு வழக்கமாகிவருகிறது" என்று கூறிவிட்டு, நிலங்கள் சேதமடையாத விதத்தில் பயிரிட்டு, அறுவடைசெய்த உணவைப் பாதுகாத்து, எல்லாருக்கும் கிடைக்கும்படி செய்தால், நம் மக்கள்தொகை அதிகமானாலும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட எத்தனையோ ஆண்டு காலமாகும் என்பதற்கான காரணங்களையெல்லாம் பட்டியலிட்டிருக்கிறார். மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும் அரசியல் அதிகாரத்தின் தன்மையையும் வைத்துப் பார்க்கும்போது, மக்கள்தொகைப் பெருக்கம் என்பது அரசு, தனது பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதற்காகச் சொல்லும் வசதியான காரணமாகத்தான் தெரிகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக